நாட்டாமை டீச்சர் மீது நடிகர் சண்முகராஜ் புகார்
நடிகை ராணி தம்மீது பொய்யான தகவலை பரப்பி வருவதாக நடிகர் சண்முகராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஹபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென் இந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "பொய்யான பாலியல் குற்றசாட்டு தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ராணிதான் தன் மீது முதலில் தாக்குதல் நடத்தினார். பின்னர் நடந்த படபிடிப்பின்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது" என்றார்.
"இந்த குற்றசாட்டின் மூலம் தானும், தமது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இது தொடர்பாக நடிகர் சங்கம் அமைத்துள்ள 3 நபர் கொண்ட குழு விசாரணையில் என் மீது குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் திரையுலகை விட்டு விலக தயார்" என்று கூறினார்.
“மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு மட்டுமே இருவரும் மன்னிப்பு கேட்டுகொண்டோம். ராணி அளித்த பாலியல் புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கவில்லை. மீடூ இயக்கத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும்" என நடிகர் சண்முகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.