சின்மயியை ஆதரிக்கும் சித்தார்த் ஸ்ரீரெட்டியை ஏன் ஆதரிக்கவில்லை? சீமான் கேள்வி
சின்மயிக்கு ஆதரவு அளிக்கும் நடிகர் சித்தார்த், ஸ்ரீரெட்டிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் மீடூ இயக்கத்தின் மூலம் தங்களின் மனக்குமுறல்களையும், வேதனைகளையும் பகிர்ந்தும், சிலர் புகாராகவும் பதிவு செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் ஆரம்பித்த மீடூ, தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிவேகரத்தில் பரவி வருகிறது. பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், மீடூ இயக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டர் பக்கத்தில் சீமானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில், மீடூ இயக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார்.
வெறுப்பாளர்களும் சிறிய மனம் கொண்டவர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் என்பது இப்போது எனக்கு புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானதாகவும், போலித்தனமானதாகவும், பெண் வெறுப்புத்தன்மையுடையதாகவும் இருக்கிறது என்றார்.
நடிகர் சித்தார்த்தில் இந்த ட்வீட்டுக்கு பதிலதித்துள்ள சீமான் கூறுகையில், இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா ? ஏன் கொடுக்கவில்லை ? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது சித்தார்த்தின் குரல்வளை எங்கே இருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை ? வைரமுத்துவை நோக்கி மட்டும் பாய்வது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.