நட்சத்திர ஹோட்டலில் பிரமுகரின் மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டல்
டெல்லியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, அவரையும் ஹோட்டல் பணியாளரையும் தரக்குறைவாக பேசியதாக மாயாவதி கட்சியின் பிரமுகர் ஒருவர் மகன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவர் லக்னோ பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அடிக்கடி டெல்லியில் நட்சத்திர விடுதிகளில் விருந்துகளில் இவர் பங்கேற்பது வழக்கம். இவரது தம்பி ரித்தேஷ் பாண்டே, தற்போது உத்திர பிரதேச சட்டப்பேரவையில் உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த ஞாயிறு அதிகாலை 3:40 மணியளவில் இந்த மிரட்டல் நிகழ்வு நடந்துள்ளது. விருந்து ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட ஆஷிஷ், பெண்கள் கழிப்பறைக்குள் நுழைய முயற்சித்தார். அப்போது அங்கிருந்த இன்னொரு பெண் வாடிக்கையாளர் ஆஷிஷ்ஷை எச்சரித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஆஷிஷ் கடுமையாக பேச தொடங்கினார்.
கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். அப்போது ஆஷிஷூடன் இருந்த பெண் ஒருவரும் ஹோட்டலின் ஊழியர் ஒருவரும் ஆஷிஷை அமைதிப்படுத்த முயன்றனர். ஆஷிஷ் பாண்டே ஹோட்டல் பணியாளரையும் தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார்.
இந்த நிகழ்வை ஆஷிஷின் சொகுசு காரில் இருந்த மற்றொரு பெண் ஒளிப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஏறக்குறைய ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஒளிப்பதிவு வெளியாகி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதுவரைக்கும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணோ, ஹொட்டல் நிர்வாகமோ காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
“யாராக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமுகரோ, உறுப்பினரோ அல்ல," என்று அக்கட்சியை சார்ந்த சுதீந்திரா பதோரியா கூறியுள்ளார்.
ஊடகங்களில் இது குறித்து செய்தி பரவிய பின்னரே, ஹோட்டல் பணியாளர் ஒருவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். தாங்கள் காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.
“ஊடகங்கள் வெளியான நிகழ்வு குறித்து டெல்லி காவல்துறை நடவடிக்கையை தொடங்கி விட்டது. ஆயுதங்கள் வைத்திருப்பது மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் இருக்கும் மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து கொண்டிருக்கிறது. உரிய, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரெண் ரிஜ்ஜூ கூறியுள்ளார்.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல், யார் யாரோ ஆயுதங்களை காட்டி மிரட்ட ஆரம்பித்திருப்பது சமுதாய நோக்கில் ஆரோக்கியமானதல்ல என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.