தமிழக விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு 3 சதவீதமாக உயர்வு

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு உள் ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளையாட்டு சங்கங்களின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு கராத்தே, வில்வித்தை போன்ற சாகசங்களை அரங்கேற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பை ஏற்ற முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, மாணவர்களுடன் சேர்ந்து கூடைப்பந்து விளையாடினார்.

பின்னர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வியும் விளையாட்டும் இரு கண்களைப் போன்றது என்று குறிப்பிட்டார். விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும், தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

விளையாட்டுகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதை தவிர்த்துவிட்டு, களத்தில் இறங்கி விளையாடும் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விழாவில் தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வென்ற நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பரிசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

More News >>