விமர்சனம்: வடசென்னை தரமான சம்பவம்!

வடசென்னை, அன்பு மற்றும் ராஜன் செய்யும் தரமான சம்பவம் மற்றும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு திடீரென என்ன ஆச்சு? என்று ரசிகர்களே வாயை பிளக்க வைப்பது போல, வார வாரம் இத்தனை மெகா ஹிட் படங்கள் குறிப்பாக நல்ல தரமான படங்கள் வருவது ஆச்சர்யத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

செக்கச்சிவந்த வானம், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் என முந்தைய வார படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில், இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான சிம்மாசனத்தை தர லோக்கல் வடசென்னை பிடிக்கவுள்ளது.

செக்கச்சிவந்த வானம் ஒரு மணிரத்னம் ஸ்டைல் காட்பாதர் கேங்ஸ்டர் படம் என்றால், வடசென்னை வெற்றிமாறனின் கேங்ஸ்டர் படம்.

ரத்தம் தெறிக்குது, ஆபாச வார்த்தைகள் காதை கிழிக்குது, கள்ளத்தனம் இல்லாத காதல் நெஞ்சை பிழியுது, கோபம், க்ரோதம், வஞ்சம் என நடிகர்களின் கண்கள் நடிக்காமல் நிஜத்தில் வாழ்கிறது இந்த வடசென்னையில்.

கதைக்களம்:

செந்தில் கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் கிஷோர் மற்றும் குணாவாக வரும் சமுத்திரகனி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையின் காரணமாக வெடிக்கும் அரசியலில் இருவரும் தனித்தனி கேங்காக உடைகின்றனர்.

இந்த இரண்டு கேங்குகளில் யார் கேங் பெரிய கேங் என்ற போட்டியும், ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளி வடசென்னையை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடனும் திரிகின்றனர்.

இந்நிலையில், கேரம் போர்டில் உலக சாம்பியனாக துடிக்கும் ஒரு சாதாரண அன்புவாக வரும் தனுஷ், எப்படி தனது கொடியை வடசென்னை கோட்டையில் நட்டு பறக்கவிடுகிறார் என்பதே படத்தின் முதல் பாகத்தின் கதை. இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளனவாம்.

முதல் பாகமே இப்படி ஒரு மிக நீளமான கதை மற்றும் கதாபாத்திரங்களால் வடசென்னையில் ஒரு கேம் ஆஃப் த்ரோனையே வெற்றிமாறன் எடுத்துள்ளார். இன்னும் இரண்டு பாகங்கள் வந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்களின் ஆவல், உடனடியாக அந்த இரு பாகங்களையும் ரிலீஸ் செய்ய வெற்றிமாறனுக்கு ரெக்வஸ்ட் லெட்டர்களாக பறக்கின்றன.

தனுஷுக்கு சமமாக அமீரின் ராஜன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திலும், விஜய்சேதுபதி வெளியேறாமல் இருந்திருந்தால், இந்த வாரமும் ஒரு விஜய்சேதுபதி படமாகவே இது அமைந்திருக்கும். 40 நிமிடங்கள் தனுஷ் இல்லாமல், அமீர் திரையில் அட்டகாசம் செய்கிறார். மிஸ் பண்ணிட்டீங்களே விஜய்சேதுபதி.

அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, அதுவும் என்னடி மாயவி பாடல் ரசிகர்களின் கண்களுக்கு ஆண்ட்ரியா கறி விருந்தே வைத்துள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கெட்டவார்த்தைகள் பேசியதற்காகவே பல விருதுகளை அள்ள போகிறார். அதுவும் அந்த சுத்தி சுத்தி அடிக்கும் லிப்-லாக். தனுஷுக்கு போட்டியாக, தனுஷுக்கு அவர் கொடுக்கும் லிப்-லாக் என ரசிகர்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டடித்தது. ஆனால், படத்தில் நமக்கு பின்னணி இசையின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் இதயத்தை மிரளவைத்துள்ளார் மனுஷன்.

சாதாரண வடசென்னை மக்களின் அன்றாட வாழ்வையும், அங்கே நடக்கும் அரசியலையும், புத்தகத்தை அவர்களிடம் இருந்து புடிங்கி வெகுதூரம் வைத்து அடியாட்களை உருவாக்கும் அரசியல்வாதிகளையும் பார்க்கும் போது ஒரு தீ நெஞ்சுக்குள் எரிகிறது. கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போட சொல்லியும் படக்குழு போடவில்லை.

ஆனால், அவை இந்த படத்தின் உயிர் நாடியாக, வடசென்னையில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பத்திற்குள்ளே பேசிக்கொள்ளும் சென்னை பாஷையாக மாறிப்போனதால், எங்குமே ஆபாசமாக தெரியவில்லை. அத்தனையும் தெளிவான பார்வையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் வெற்றிமாறன் ஸ்க்ரிப்ட் செய்த விதத்தையே பாராட்ட வைக்கின்றது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களுக்கு ஒரு படி மேல் கொடி கட்டி பறக்கிறது வடசென்னை.

வேல்ராஜின் கேமரா நம்மை வடசென்னையில் உள்ள காசிமேட்டு குப்பத்துக்கும், வியாசர்பாடி ஹவுசிங் போர்ட்டுக்கும், அழுக்கு நிறைந்த மக்களின் வெள்ளை மனங்களையும், அழகான வீடுகளில் இருப்போருக்குள் உள்ள அழுக்குகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வடசென்னை ரேட்டிங்: 4/5.

More News >>