குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!
குஜராத் மாநிலத்தில் தன் ஐந்து குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் அருகே உள்ள பாஞ்ச் பிப்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா பாலியா(40). கணவரை இழந்து வாழும் இவருக்கு தர்மிஸ்தா(10), அக்ஷிதா(8) குல்தீப்(7) கார்த்திக்(4) ருத்ரா(1½ வயது) என மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் தவித்த கீதா பாலியா நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் சிலர் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 4 குழந்தைகளும் இறந்துவிட கீதா பாலியாவையும், மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது.
இந்நிலையில் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதாக கீதா பாலியா கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வறுமையின் கோரத் தாண்டவத்தால் பெற்ற குழந்தைகளையே கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.