அம்பயரை திட்டிய மேற்கிந்திய பயிற்சியாளருக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை
அம்பயரை நோக்கி தகாத வார்த்தைகள் கூறி திட்டியதால், மேற்கிந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேற்கிந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரர் பொவேல் அஸ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பந்தை தரையில் உரசியது மாதிரி தெரிந்தது. ஆனால் டிவியில் பார்க்கும் 3வது அம்பயர் விக்கெட் கொடுத்துவிட்டார். இதனால் மேற்கிந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கடும் கோபம் அடைந்தார்.
அத்துடன் டிவி அம்பயரின் அறைக்குச் சென்று முறையற்ற வார்த்தைகளை கூறி வாக்குவாதம் செய்தார். அத்துடன் நிற்காமல் 4-வது அம்பயரிடமும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்டூவர்ட் லா மீது கள அம்பயர்கள் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, இயன் குட், 3-வது அம்பயர் நிகெல் லாங், 4-வது அம்பயர் நித்தின் மேனன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டூவர்ட் லா ஐசிசியின் விதிமுறையை மீறியதாக, அவருக்கு 100 சதவீதம் அபராதத்துடன் தடைக்கான மூன்று புள்ளிகளும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின்போது 25 சதவீதத்துடன், தடைக்கான ஒரு புள்ளியையும் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளிகள் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு தடையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டூவர்ட் லா இந்தியாவிற்கு எதிராக 21 மற்றும் 24ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
டெஸ்டில் இந்தியாவிடம் 2-0 என்று சரணடைந்த மேற்கிந்திய அணி, மேலும், பயிற்சியாளர் பலமின்றி ஒருநாள் போட்டிகளில் பரிதவிக்கவுள்ளது.