சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளதையொட்டி, அங்கு பதற்றமாக சூழல் நிலவுகிறது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தள அரண்மனையினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐயப்பசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் வருகிற 22ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
காவல்துறை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பத்தனம்திட்டா காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, நிலக்கல் மற்றும் பம்பையில், 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.