மிசோராம்- பாஜகவில் சேர்வதற்காக பதவி விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
வடகிழக்கு மாநிலமான மிசோராமில் நவம்பர் மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அங்கு பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான புத்தா தான் சக்மா, காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.
மிசோராம் சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 40. முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான லால்ரின்லியானா செய்லோ ஏற்கனவே கட்சியை விட்டு விலகி மிசோ தேசிய முன்னணியில் இணைந்துள்ளார்.
செப்டம்பர் 14ம் தேதி மாநில உள்துறை அமைச்சர் பதவியை விட்டு விலகிய லால்ஸிர்லியானா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. செப்டம்பர் 17ம் தேதி, மிசோரம் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது புத்தா தான் சக்மாவும் விலகியுள்ளார்.
காங்கிரஸூக்கு 31, மிசோ தேசிய முன்னணிக்கு 6 என்று மொத்தம் தற்போதைய மிசோரம் சட்டப்பேரவையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர்.
புத்தா தான் சக்மா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது சக்மா சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி அமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோராம் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜாண் வி. ஹ்லுனா, காங்கிரஸை விட்டு விலகிய சக்மா, பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார்.