பெண் பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல்!
சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உள்பட நாடெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனிடையே இளம்பெண்கள் கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாக கருதிய ஐயப்ப பக்தர்கள், நேற்று மாலை முதல் நிலக்கல்லில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சரிதா பாலன், கோயிலுக்குள் தான் செல்ல முயற்சிக்கிறார் என்று நினைத்த போராட்டக்காரர்கள், அவரை கடுமையாக தாக்கியதுடன் இழிவான வார்த்தைகளால் திட்டியும் காயப்படுத்தி உள்ளனர்.
அதேபோல் செய்தியாளர் ராதிகா ராமசாமியும் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவரின் காரை அடித்து நொறுக்கிய வன்முறையாளர்கள், நாங்கள் மீண்டும் திரும்பி சென்று விடுவதாக செய்தியாளர் கூறியும், அதனை கேட்காமல் கண்மூடித்தமான தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ரீபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் மற்றும் கேமரா மேன்களும் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
முன்னதாக சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர் லிபி பத்தனம்திட்டா பேருந்து நிலையத்திலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஐயப்ப பக்தர்களின் போராட்டம் வலுவடைந்து வருவதால், சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான போலீடார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.