கட்டபொம்மன் கோட்டையை புதுப்பிக்க 65 லட்சம் ஒதுக்கீடு
கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் விழாவின்போது தமிழக செய்தி தொடர்பு மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள கட்டபொம்மனின் கோட்டையை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையானவர் பாஞ்சாலங்குறிச்சியின் ஆட்சி செய்த பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் ஆங்கிலேயர்களால் 1799ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
அவரது 219வது நினைவு தினம் செவ்வாய்கிழமை கயத்தாறில் நடைபெற்றது. அதில் தமிழக செய்தி தொடர்பு மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அங்குள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதாகவும், விடுதலை போராட்ட வீரர்களின் நினைவு இல்லங்கள் மற்றும் உருவ சிலைகளை பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள கட்டபொம்மனின் கோட்டையை புதுப்பிக்கும் பணிக்கு 65 லட்சம் ரூபாயும், அந்த கிராமத்தின் சாலைகளை மேம்படுத்துவதற்கு 35 லட்சம் ரூபாயும் தமது முயற்சியால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.