சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து: 6 பேர் பலி
ஆந்திரா மாநிலம் கர்னூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென லாரி ஏறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (27). இவரது மனைவி பாத்திமா. இவர்கள் தங்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் மூன்று லோடு ஆட்டோவில் தர்காவுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மூன்று ஆட்டோக்களில் ஒரு ஆட்டோ திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால், ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு பழுது பார்க்கப்பட்டு வந்தது. இதனால், ஆட்டோவில் இருந்த உறவினர்கள் இறங்கி சாலையோரம் படுத்து இளப்பாறிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென ஒரு லாரி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏறியது. இதில, ஷேக் காஜா, பாத்திமா, உசேன் (23), ஆசிப் (7), அப்சரா (9), மெஜித் (7) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி அங்கிருந்து தப்பியது. விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.