லீனா மணிமேகலை மீது சுசிகணேசன் மானநஷ்ட வழக்கு
எழுத்தாளர் லீனா மணிமேகலை தம்மீது ஆதரமற்ற அவதூறு கருத்துகளை பரப்பி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசிகணேசன், மனு தாக்கல் செய்துள்ளார்.
மீடூ விவகாரத்தில், எழுத்தாளரும் குறும்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள சுசி கணேசன், “லீனா மணிமேகலை... உங்கள் அருவருப்பான பொய், என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.இந்த உலகம் பொறுக்கிகளுக்கும் போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்து விட்டீர்கள்." என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னர் பேசிய அவர், சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் மீது எந்த வித ஆதாரமுமின்றி அவதூறு பரப்புவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 200 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்கிற அடிப்படையில் லீனா மணிமேகலை மீது வழக்கு தொடுத்துள்ளேன்" என்றார்
"உயர் நீதிமன்றத்தில் ஒரு ரூபாய் மட்டும் நஷ்ட ஈடாக கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம். நீதிமன்றம் விடுமுறை என்பதால் வரும் திங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம். சினிமா துறை இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது தவறு நடக்கிறதோ என எண்ண தோன்றுகிறது. மீடூ இயக்கத்தை தவறாக பயன் படுத்தும் பெண்களுக்கு இந்த வழக்கு பாடமாக இருக்கும்" என இயக்குநர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.