விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்!
விஜய்சேதுபதி, 80 வயது நாடக ஆசிரியர் அய்யாவாக நடித்துள்ள சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதக்காதி. இப்படத்தில், வயதான நாடக ஆசிரியர் அய்யா எனும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியான போது, அட! இது விஜய்சேதுபதியா என அனைவரையும் ஆச்சர்யபடும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மேக்கப் மூலம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விரைவில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 96 படத்திற்கும் யு சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் தான் 96 படத்தை இயக்கியிருந்தார்.
சீதக்காதி படத்தில், விஜய்சேதுபதியுடன், ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குநர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.