சபரிமலையில் வலுக்கும் போராட்டம்-144 தடை உத்தரவு அமல்
சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தள அரண்மனையினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் ஈடுபட்டனர்.
பரபரப்பான சூழலிலும், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை நடந்தது. சபரிமலையை சுற்றியுள்ள சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
மலையேறும் இடத்தில் சத்தியாகிரக பிரார்த்தனையில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள், கோயிலுக்கு வந்த பெண்களின் காலில் விழுந்து, உள்ளே செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர். இதனால் பாதி தூரம் மலையேறிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாதவி என்ற பெண் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பினார்.
சபரிமலை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் எலவுங்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.