ஜஸ்வந்த் சிங் மகன் மூலம் ராஜபுத்திரர்களின் வாக்குக்கு குறி வைக்கும் காங்கிரஸ்

பாரதீய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களுள் ஒருவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மான்வேந்திர சிங். இவர் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். மான்வேந்திர சிங், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மான்வேந்திர சிங்கின் வரவு, மேற்கு ராஜஸ்தான் பகுதியில் வசிக்கும் ராஜபுத்திரர்களின் வாக்குகளை காங்கிரஸூக்கு கொண்டு வரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பார்மர் பகுதியில் ஷியோ தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு மான்வேந்திர சிங் வெற்றி பெற்றார்.

அவரது தந்தை ஜஸ்வந்த் சிங்கிற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட பாரதீய ஜனதா சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட்டு, பாரதீய ஜனதா வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவரான அவர், கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

அவரது மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான மான்வேந்திர சிங், கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, "தாமரை என் தவறு" என்ற தலைப்பின் கீழ் பேரணி ஒன்றை நடத்தினார். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான நிலையை எடுத்த அவர், அஷோக் கெல்லாட், சச்சின் பைலட் போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களையும், ராகுல் காந்தியையும் சந்தித்தார். இப்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில வாக்காளர்களில் எட்டு முதல் ஒன்பது சதவீதமாக இருக்கும் ராஜபுத்திரர்கள் பாரம்பரியமாக பாஜக-வுக்கு வாக்களித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் மான்வேந்திர சிங்கை மலைபோல நம்பியுள்ளது காங்கிரஸ்.

More News >>