ஜெயலலிதா வாரிசுக்காக காத்திருக்க மாட்டோம் - கலெக்டர் அதிரடி
ஜெயலலிதா வீட்டுக்கு சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது முடிவாகும் வரை காத்திருக்க மாட்டோம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டை அரசே எடுத்து கொண்டு நினைவிடமாக மாற்றும் பணியை செய்ய உள்ளது.
நில ஆர்ஜித சட்டப்படி வீட்டை அரசு எடுத்து கொள்ளும். அந்த வீட்டுக்கு என்ன விலை மதிப்போ அது ஜெயலலிதாவின் சட்டப் பூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெற்றன.
இதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து வீடு முழுவதும் அளவிடும் பணியை செய்தனர். ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள ஆட்சியர் அன்புச்செல்வம், “ஜெயலலிதா இல்லத்தை விரைவிலேயே நினைவிடமாக மாற்று வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் விலை மதிப்பு என்ன என்பது பற்றி கணக்கிடப்படும்.
ஜெயலலிதா வீட்டுக்கு சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது முடிவாகும் வரை காத்திருக்க மாட்டோம். நிலத்தை மதிப்பிட்டு அதற்கான தொகையை அரசு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும். சட்டப்பூர்வ வாரிசு யார் என முடிவு வந்ததற்கு பிறகு அந்த பணம் அவர்களுக்கு வழங்கப்படும்.
நில ஆர்ஜிதம் சம்பந்தமாக இந்த வீட்டை ஒட்டி உள்ள மற்றவர்களிடமும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஜெயலலிதா வீட்டில் சில அறைகளை வருமான வரித்துறையினர் சீல் வைத்துள் ளனர். அவற்றை அளவீடு செய்ய முடியவில்லை. வருமான வரித் துறை அதிகாரிகள் முன்னிலையில் அவற்றை அளவீடு செய்வோம். என்று தெரிவித்துள்ளார்.