சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடி !
சபரி மலை ஐயப்பனை தரிசிக்க எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லை என்றும் அணைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க சபரி மலைக்கு செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.
ஐப்பசி 1ம் தேதி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளை செய்ய இன்று நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாய் சபரி மலைக்கு செல்லும் அணைத்து பாதைகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
அதில், 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளையும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களையும் மட்டுமே போராட்ட குழுவினர்கள் சபரி மலைக்கு செல்ல அனுமதித்தனர். மேலும் அவர்கள் பெண் பத்திரிகையாளர்களையும் கூட அனுமதிக்கவில்லை.
இப்படி போராட்டம் தீவிரமடைந்து ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறியது. நிலக்கல் என்ற பகுதியில் சுமார் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு அவசர சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச இந்து பரிஷத் அமைப்பு சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடத்திட அழைப்பு விடுத்தனர். பம்பா செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று இரவு 12 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை இந்த கடையடைப்பு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் குறிப்பிட்ட அந்த இடங்களில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்பு எதிராக யாரும் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறியுள்ளார்.