குட்கா வழக்கு- மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் நீட்டிப்பு
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சோதனை நடந்தது.
பிறகு, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் 5 பேரை சிபிஐ கைது செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதனை தொடர்ந்து மாதவராவ் உள்ளிட்ட 6 பேரும், சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 31 வரை நீட்டித்து நீதிபதி ஜவஹர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.