50 லட்சம் ரூபாய் கேட்டு அதிகாரி மகன் கடத்தல்
தருமபுரி மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரின் மகன் 14 வயதுடைய பிரகதீஸ்வரன் காந்திநகர் பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பள்ளி முடிந்தது வீட்டுக்கு புறப்பட்டபோது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உங்கள் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மாணவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை ராஜாவை போனில் தொடர்பு கொண்ட ஆட்டோ ஓட்டுநர், உங்கள் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க 50 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அந்த ஆட்டோவிலிருந்து பிரகதீஸ்வரன் கீழே குதித்து ஊருக்குள் சென்று, அந்த பகுதி மக்களிடம் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கடத்தி வந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறினார்.
இது குறித்து, தருமபுரி நகர காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனிடமும் விசாரணை நடத்தி, ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.