அரசியலில் ரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்? - இயக்குநர் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற புதிருக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு விடையாக, தனி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அவர் ஞாயிறன்று அறிவித்தார். நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ரஜினி, கமல் இருவருக்கும் மிக நெருக்கமான இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தனியார் செய்தி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ”ரஜினி சார் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இவ்வளவு காலம் திரையுலகில் இருந்துவிட்டு, தற்போது மக்களை நோக்கி வருவது என்பது நல்ல பார்வை.
ஆனால், ஏற்கெனவே அரசியலில் இறங்கி கமல் சார் பணிபுரிய தொடங்கிவிட்டார். அவருக்குப் பின்னால்தான் ரஜினி சார் அரசியலுக்கு வந்திருக்கிறார். இரண்டுமே மகிழ்ச்சியான சம்பவங்கள்தான்.
கமல்ஹாசனின் பார்வை என்பது ரொம்ப தீர்க்கமாக அடிதட்டு மக்களைச் சார்ந்திருக்கும். விஞ்ஞான பூர்வமாக, நிர்வாக ரீதியாக, பொருளாதார ரீதியாக இன்றைய அரசியல் தேவை என்ன என்பதற்கான செயல்வடிவத்தைக் கொண்டு கமல் அரசியலில் இறங்குவார்.
இதேபோன்ற அரசியல் பார்வை ரஜினிக்கு இருந்தால் மகிழ்ச்சி. ஆனால், காலம் என்னவாக அவரை காண்பிக்கப் போகிறது என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.