வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ம் தேதி தொடங்கும்: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 21ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது: வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகள் மற்றும் இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் தென்மேற்கு பருவக் காற்று விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

அதன்பிறகு தமிழகம், அதை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பகுதிகள், தெற்கு கர்நாடகத்தின் உட்பகுதி மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது கேரளப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தெற்கு அந்தமான் அருகே காற்று சுழற்சியும் நிலவி வருகிறது. அவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More News >>