ரஜினிகாந்த் துக்க செய்தியை புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார் - இயக்குநர் கவுதமன் ஆவேசம்

ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார் என்று இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற புதிருக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு விடையாக, தனி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அவர் ஞாயிறன்று அறிவித்தார். நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கௌதமன் கூறுகையில், ”நினைத்து பாரக்க முடியாத துயரமான மனோநிலையில்தான் இந்த ஆண்டு தொடங்குகிறது. 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இநத தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது.

நீர், நிலம், ஆறு, வளம் ஆகிய மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்களின் உரிமையை காப்பாற்ற எங்கேயாவது இருந்து ஒரு உண்மையான, தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்துவிடாதா என்று தேடி வருகிறோம்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களின் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா. இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் பாஜகவின் பின்புலத்தில்தான் இயங்குகிறார். மகராஷ்டிராவின் பால் தாக்கரேவை என்னுடைய தந்தையாகவும் கடவுளாகவும் பார்க்கிறேன் என்று ரஜினிகாந்த் ஒரு முறை கூறியுள்ளார்.

பால்தாக்கரே என்பவர் அந்த மாநிலத்திலிருந்து இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் ஓட ஓட அடித்து விரட்டியவர். மகாராஷ்டிர மக்களை தவிர வேறு யாரும் இந்த மண்ணில் இருக்கக் கூடாது என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தி தமிழர்களையும் அடித்து துரத்தினார்

தமிழர்களை அடித்து துரத்தியவர் உங்களுக்கு கடவுள், தந்தை என்றால், அவரது பாசமிகு பிள்ளையாக எங்கள் தமிழ் மண்ணை ஆளும் தகுதி ரஜினிகாந்துக்கு உள்ளது என்பதே என் கேள்வி.

வள்ளலாரின் ஆன்மிகத்தை தாண்டி எங்களுக்கு தெரியாத பாபாவின் ஆன்மிகம் எங்களுக்கு தேவையில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஆபத்தானது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>