போரூர் அருகே பெண் குழந்தையை வீசி சென்ற பெண் அடையாளம்

போரூர் மின்சார சுடுகாடு அருகே பிறந்து 4 நாட்களே ஆன பெண்குழந்தையை போட்டு சென்ற பெண் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார்.

போரூர் அருகே உள்ள காரம்பாக்கம் சுடுகாடு அருகே நேற்று நள்ளிரவு பச்சிளம் குழந்தை ஒன்று அழும் குரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற ரவி என்ற வாட்ச்மேன் கைக்குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அந்தக்குழந்தையை அருகிலிருந்து காவல்துறை சோதனைச் சாவடியில் அவர் ஒப்படைத்தார். பின்னர் அக்குழந்தைக்கு சின்னப் போரூர் சுகாதார மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், குழந்தையை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஒரு ஆணும் பெண்ணும் நள்ளிரவில் குழந்தையைப் பையில் அடைத்து சுடுகாடு அருகே விட்டுச் செல்லும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர். அந்த காட்சியில் உள்ள நபரை பிடித்து விசாரித்தபோது போரூரில் தங்கி உள்ள பெண் ஒருவர் குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது.

அந்த பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருச்சியை சேர்ந்த 22 வயது பெண் போரூரில் வீட்டில் தனியாக தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவரது தாய் உயிரிழந்தார். இதனால் திருமண பேச்சு அப்படியே நின்றுவிட்டது.

திருமணம் நிச்சயமான இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு வந்து, அந்த பெண்ணிடம் மிக நெருக்கமாக இருந்துள்ளார். தாய் இறந்ததால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இளைஞர் மறுத்துவிட்டார். இதனிடையே, அந்த பெண் 5 மாதம் கருவை சுமப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண், யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு அதை பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் இளம்பெண் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனை தொடர்ந்து அருகிலுள்ள இளைஞரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்ற அந்த இளம்பெண், குழந்தையை காரம்பாக்கம் மின்சார சுடுகாடு அருகே வீசியது தெரியவந்துள்ளது.

போரூரில் இருந்து மீட்கப்பட்ட அந்த இளம்பெண் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

More News >>