ஆண் பக்தர்களின் எதிர்ப்பு! திருப்பி அனுப்பப்பட்ட நியூயார்க் பத்திரிக்கையாளர்!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நியுயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர், ஆண் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்ப நேரிட்டது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உள்பட நாடெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று கோயிலுக்குச் செல்வோம் என்று தேசிய அளவிலும் இருந்து புறப்பட்ட பல பெண்களும் நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். நிலக்கல்லில் முகாமிட்ட ஐயப்ப பக்தர்கள் இவர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தினர். வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குல் நடத்தப்பட்டது. இத்துடன் போலீசாரும் தடியடி நடத்தியதில் ஆன்மீகத்தளம் போர்க்களம் போல் காணப்பட்டது. இன்று பத்தனம்திட்டா பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளரும், டெல்லியைச் சேர்ந்தவருமான சுஹாசினி ராஜ் என்பவர் வெளிநாட்டைச் சேர்ந்த தனது சக பத்திரிக்கையாளருடன் சபரிமலை சென்றார். இவர்கள் இருவரும் பம்பை நுழைவு வாயிலுக்குள் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். மலையேற இருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் இவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
மலையேற முயற்சிக்கும்போது, ''நான் சுவாமி தரிசனம் செய்ய வரவில்லை. எனது பணியை செய்ய வந்துள்ளேன்'' என்று சுஹாசினி தெரிவித்துள்ளார். கோயிலுக்கு செல்லும் வழி எங்கும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அமர்ந்து ஐயப்ப கரகோஷம் எழுப்பி கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்களை தடுத்து வருகின்றனர்.