பிறந்தநாள் அன்றே இறந்த காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான என்.டி. திவாரி என்னும் நாராயண் தத் திவாரி, அக்டோபர் 18ம் தேதி டெல்லியிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. 1925ம் தேதி இதே நாளில் அவர் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போரில் ஈடுபட்டு 17 வயதில் சிறை சென்ற புகழ் கொண்டவர் என்.டி. திவாரி. அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திவாரி, 1952ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி மூலம் அரசியலுக்கு அறிமுகமானார். 1963ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1965ம் ஆண்டு தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸின் தலைவரானார். 1969ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார்.

1986ம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இடம் பெற்றார். மூன்று முறை நாடாளுமன்ற மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிக்கப்படாத உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சராக மூன்று முறை (1976, 1984, 1988) பதவி வகித்துள்ள என்.டி. திவாரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் (2002 - 2007) பதவி வகித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இந்தியாவின் பிரதமருக்காக என்.டி. திவாரியின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. நரசிம்மராவுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அர்ஜூன் சிங், நட்வர் சிங், மோஹ்சினா கித்சிங் ஆகியோருடன் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) கட்சியை ஆரம்பித்தார். சோனியா காந்தி, காங்கிரஸின் தலைவரானதும் தமது கட்சியை காங்கிரஸூடன் இணைத்தார்.

2007ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டு ஒன்றின் பின்னணியில், உடல்நிலையை காரணம் காட்டி என்.டி.திவாரி ஆந்திர ஆளுநர் பதவியிலிருந்து 2009ம் ஆண்டு விலகினார்.

பல உடலுறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் என்.டி.திவாரி உடல் நலிவுற்றிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 18 அன்று பிற்பகல் 2:50 மணிக்கு என்.டி.திவாரி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல் அமைச்சரான என்.டி. திவாரியின் மறைவை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>