வில்வித்தையில் வெள்ளி வென்ற விவசாயி மகன் !
அரியானாவை சேர்ந்த ஆகாஷ் மாலிக், அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின், வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (வயது 15) வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் இவர் அமெரிக்க வீரர் டிரண்டன் கோவல்சிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை விவசாயி ஆவார். அவர் தன்னைப் போல் தன் மகன் விவசாயம் செய்வதை விரும்பவில்லை.
இதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில், ‘நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினார். ஆனால், வில்வித்தையில் பயிற்சி பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்.