விமான பணிப்பெண்ணை அங்கே தட்டினார்... பின்பு...?
விமான பணிப்பெண்ணை பின்புறம் தட்டிய பயணி ஒருவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மும்பையிலிருந்து பெங்களூரு செல்ல இருந்த இண்டிகோ நிறுவன விமானத்தில் இது நிகழ்ந்தது.
இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு கிளம்ப ஆயத்தமாக இருந்தது. பெங்களூருவை சேர்ந்த ராஜூ கங்கப்பா என்ற 28 வயது வாலிபர் அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக உட்கார்ந்திருந்தார்.
அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கங்கப்பாவை கடந்து சென்றுள்ளார். 20 வயது இளம்பெண்ணான அவர் தன்னை கடந்து சென்றபோது, ராஜூ கங்கப்பா, அவரை பின்பக்கம் தட்டியதாக கூறப்படுகிறது. பயணியின் அச்செயலுக்கு, பணிப்பெண் எதிர்ப்பு காட்டியுள்ளார். உடனே வாலிபர் கங்கப்பா, பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ஆகவே, பணிப்பெண் தன் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, வாலிபர் ராஜூ கங்கப்பா விமானம் புறப்படுவதற்கு முன்பே மும்பையில் கீழே இறக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் மும்பை விமான நிலைய காவல்துறை கங்கப்பாவை கைது செய்தனர். புதன்கிழமை மும்பை நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட ராஜூ கங்கப்பாவுக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.