ரஜினி அரசியலில் சாதிப்பாரா? - ரோஜாவின் கருத்து என்ன?
அரசியலில் நிச்சயம் ரஜினிகாந்த் சாதிப்பார் என்று நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா கூறியுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதில் நேர்மறையான விஷயங்களும், எதிர்மறையான விஷயங்களும் உள்ளன. இந்நிலையில், அரசியலில் நிச்சயம் ரஜினிகாந்த் சாதிப்பார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என நான் உட்பட தமிழக மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தோம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்” என்றார்.
அரசியலில் ரஜினிகாந்த் சாதிப்பாரா என்ற கேள்விக்கு, “ரஜினிகாந்துடன் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். ஒளிவு மறைவின்றி பேசுவதே அவரது பலம். இது அரசியலுக்கு ஒத்துவராது. தமிழக அரசியல் மட்டுமல்ல, அனைத்து மாநில அரசியலும் ரஜினிகாந்துக்கு தெரியும்.
அவருக்கு ‘பாலிடிக்ஸ்’ தெரியும். ஆனால், ‘பாலி ட்ரிக்ஸ்’ தெரியாது. இதை அவரே போக போக கத்துக் கொள்வார் அல்லது மற்றவர்கள் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். அரசியலில் அவர் சாதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.