கருப்பை தானம் பெற்ற பெண்ணுக்கு குழந்தைப்பேறு: பூனா மருத்துவர்கள் சாதனை
கருப்பை தானம் பெற்ற பெண்ணுக்கு பூனாவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற குழந்தைப்பேறு கிடைத்துள்ளது இதுவே முதன்முறை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதாராவை சேர்ந்தவர் மீனாட்சி வாலன் (வயது 28). கருச்சிதைவின் காரணமாக இவரது கருப்பை பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது. குழந்தைப்பேறு வேண்டும் என்று ஆசைப்பட்ட மீனாட்சிக்கு அவரது தாயார், தமது கருப்பையை தானமாக அளித்தார். கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் இந்தக் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. மருத்துவர் நீட்டா வார்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மீனாட்சிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஐவிஎஃப் என்னும் சோதனைக்குழாய் கருத்தரித்தல் முறையில் கருத்தரிக்க மீனாட்சிக்கு மருத்துவ குழுவினர் அறிவுரை வழங்கினர். அதன்படி தாயாரிடமிருந்து தானமாக பெற்ற கருப்பையில் மீனாட்சி தன் குழந்தையை சுமந்தார். கடந்த வியாழன் அன்று பூனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீனாட்சி வாலனுக்கு சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை முறையில் பெண் குழந்தை பிறந்தது.
"சுவீடன் நாட்டில் இதேபோன்று கருப்பை மாற்றம் மற்றும் பிரசவம் ஒன்பது பேருக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டு பேருக்கும் நடந்துள்ளது. இந்தியாவில் பூனாவில் நடந்துள்ளது இம்முறையில் 12வது பிரசவமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இம்முறையில் நடந்த முதல் குழந்தைப்பேறு இதுதான்," என்று மருத்துவர் நீட்டா வார்த்தி தெரிவித்துள்ளார்.