தெலங்கானாவுக்கு ராகுல் வருகை: தேர்தல் கூட்டணி அமையுமா ?
டிசம்பர் 7ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 20ம் தேதி சனிக்கிழமை தெலங்கானாவுக்கு வருகை தர இருக்கிறார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவை கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
மஹாராஷ்டிராவின் நன்டெட் என்ற இடத்திலிருந்து தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டம் பாய்ன்ஸா நகரத்திற்கு ராகுல் காந்தி வருகிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், காமாரெட்டியிலும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அன்று ஹைதராபாத்தில் சார்மினார் அருகே காங்கிரஸ் கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து ராஜீவ் காந்தி சத்பவனா யாத்ரா நாள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அவ்விழாவில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்த கே.ரோசையாவுக்கு ராஜீவ் காந்தி சத்பவனா யாத்ரா விருதினை காங்கிரஸ் தலைவர் வழங்க இருக்கிறார் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சிரவன் தசோஜூ தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தெலங்கானா ஜனா சமிதி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து, ராகுல் காந்தி வருகைக்குப் பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் நம்புகின்றன.