ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் காய்ச்சல் தீவிரம்: 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் காய்ச்சல் அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து, இதுவரை 106 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் உணரப்பட்டது. காய்ச்சல் என வரும் மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஜிகா வைரஸை மருத்துவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், 25 கர்பிணிப் பெண்கள் உள்பட சுமார் 106 பேர் ஜிகா வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் பாதிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கும வகையில் மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழுவை ராஜஸ்தானிற்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், ஜிகா வைரஸ் காய்ச்சல் அதிகளவில் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளதால் சாஸ்திரி நகர் பகுதி முழுவதும் சுகாதார ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். இதில், 58 வீடுகளில் வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் கொசுக்களை ஒழிப்பதற்காக புகை, லார்வா ஒழிப்பு மருந்து தெளிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜெய்ப்பூர் சாஸ்திரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 330 குழுக்கள் கொசு லார்வாக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தசை பிடிப்பு, மூட்டு வலி மற்றும் தோல் அரிப்பு உள்ள அறிகுறிகள் மூலம் ஜிகா வைரஸ் தாக்கும். இந்த காய்ச்சல் கர்ப்பிணி பெண்களை தாக்கினால் அது அவர்களுக்கு ஆபத்தானது. அதையும் மீறி குழந்தை பிறப்பவர்களுக்கு குழந்தையின் தலை சிறியதாக பிறப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், ஜிகா வைரஸை கட்டுப்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.