சபரிமலை பிரச்சனை எச்சரிக்கை செய்த மோடி அரசு!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டம் குறித்து கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் சட்ட ஒழுங்கு பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் 3 மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடந்து வருகின்றன. 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர நடை புதன் கிழமை மாலை திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது தடியடி போன்ற சம்பவங்கள் நடந்தன. கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக நடக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடாமல், எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகும். மக்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள் வாயிலாக வீண் வதந்திகளையும், ஆதாரமற்ற செய்திகளையும் பரப்பிவிடுவதை தடுக்கத் தேவையான உத்தரவுகளை முன்னெச்சரிக்கையாகப் பிறப்பிக்கலாம். எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.
பெண்ணிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இடதுசாரிகள் ஆகியோர் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரச்சாரங்களும் செய்கிறார்கள். அதேசமயம், இவர்களுக்கு எதிராக இந்துக் குழுக்களும், இந்து சமயத்தினரும், பக்தர்களும் பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சில சாதிய அமைப்புகள் மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டங்களை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 50 முதல் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்று வருகின்றனர், அதில் குறிப்பிட்ட அளவுக்குப் பெண்களும் இருக்கிறார்கள். கேரளா தவிர்த்து தமிழகம், கர்நாடகாவிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது