மெர்சல் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்!
வெறும் ஐந்தரை மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் சர்கார் டீஸரை பார்த்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, கரு.பழனியப்பன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. சர்கார் டீஸர் வெளியானவுடன் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை 10 லட்சம் பேர் சர்கார் டீஸரை யூடியூபில் பார்த்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அனலிட்டிகல் ரிப்போர்ட்டை வெளியிட்டது.
ஆனால், விஜய் ரசிகர்கள் யூடியூபின் லைக் பட்டன் மற்றும் யூடியூப் பக்கத்தை விசிட் அடித்து, யூடியூபையே ஸ்தம்பிக்க வைத்தனர். இதனால், அதன் சரியான கணக்கு இதுவரை தெரியவில்லை. 14 மணி நேரத்தில் 1 கோடியே 15 லட்சம் பார்வையாளர்கள் டீஸரை பார்த்துள்ளதாகவும், 10 லட்சம் பேர் லைக்குகளை குவித்துள்ளதாகவும் யூடியூப் இணையதளம் காட்டுகின்றது.
சன்பிக்சர்ஸ் தரப்பில், 5 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே 1 கோடிக்கும் மேலான ரசிகர்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 10 லட்சம் லைக்குகள் 5 மணி நேரத்துக்குள் கிடைத்து, மெர்சல் டீஸர் செய்த சாதனையை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே விஜய்யின் மெர்சல் டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 1கோடியே 26 லட்சம் பார்வைகளையும், 7 லட்சம் லைக்குகளையும் பெற்று முதலிடத்தில் இருந்தது. மெர்சலை தொடர்ந்து வெளியான ரஜினியின் காலா மற்றும் 2.0 டீஸர்கள் இந்த சாதனையை முறியடிக்க தவறின.
இந்நிலையில், நேற்று வெளியான விஜய்யின் சர்கார் படத்தின் டீசர், மெர்சல் சாதனையை 5 மணி நேரத்திலேயே முறியடித்து புதிய சாதனையையும் சவாலையும் மற்ற நடிகர்களுக்கு விட்டுள்ளது.
இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.