ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்- பயிர்கள் சேதம்
ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 15க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. இந்த காட்டுயானைகள் அனைத்தும் தேன்கனிகோட்டை வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன.
அந்த காட்டுயானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள லக்கசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி, சோளம் உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், யானைகளால் பயிர்கள் சேதம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தேன்கனிகோட்டை வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சேதமான ராகி மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வனத்துறை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிகோட்டை வனப்பகுதியில் சுற்றிவரும் இந்த காட்டுயானைகளால் தொடர்ந்து விவசாய நிலங்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த காட்டுயானை கூட்டத்தை கர்நாடகா மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.