பெண்கள் எல்லாம் நக்சலைட்டுகள்! ஹெச்.ராஜா

கோடிக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் எல்லாம் நக்சலைட்டுகள் என்றும், இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும் இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக நெல்லையில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சபரி மலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசித் தாக்குவதாக கூறினார். சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி என்ற பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்றும், பெண் நக்சலைட்டுகள்தான் சபரி மலை செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும் இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்று வரும் ராஜராஜசோழனின் சதய விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற பெண்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று குறிப்பிட்டார். மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்த கேரள அரசு இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

More News >>