சென்னையில் இரு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- இருவர் கைது
கோவை, ஜோத்பூர் விரைவு ரயில்களுக்கு மிரட்டல் விடுத்த இருவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கடிதம் ஒன்று வந்தது. அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார், ஜோத்பூர் விரைவு ரயிலை எண்ணூரில் நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி சென்ட்ரல் அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த ரயில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முழு ஆய்வுக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
இதனிடையே, ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இக்பால் உசேன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்ட்ரலில் இருந்து புறப்படும் கோவை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்ற இளைஞரை வடபழனி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், தன்னுடைய சொந்த ஊரான வேலூருக்கு சென்று பெற்றோரை பார்க்க இருப்பதாகவும், கோவை விரைவு ரயில் நேரத்தை தாமதப்படுத்த பீதியை கிளப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.