சர்க்கஸ் கூடாரம் நடத்த தனித்திறன் வேண்டும்- முதலமைச்சர் காட்டம்

சர்க்கஸ் கூடாரம் நடத்த தனித்திறன் வேண்டும் என அதிமுகவை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்க நடந்த முயற்சிகள் பலிக்காததால், அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்."

"ஒப்பந்த விவகாரத்தில், திமுக ஆட்சியில் வகுக்கப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த சாலை அமைக்கும் பணிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 77% கூடுதலாக பணம் செலவிடப்பட்டுள்ளது. தோண்டத் தோண்ட பல முறைகேடுகள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து விசாரிக்கப்படும்" என்றார்.

சர்க்கஸ் கூடாரம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிய விமர்சனத்திற்கு பதிலளித்த முதலமைச்சர், சர்க்கஸ் நடத்தவும் தனித்திறன் வேண்டும் என்று கூறினார்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்த பட்டுள்ளது. நிதி சுமையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

More News >>