வடகிழக்கு பருவமழை- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் தமிழகத்தின் முக்கிய இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உட்பட தனியார் நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர் என பலரும் பங்கேற்றனர்.

தொற்று நோய் தடுப்பு வழிமுறைகள், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி, பரவுதல், தடுப்பு வழிகள், கொசுக் கடியால் பரவும் நோய்கள், நிலவேம்பு கஷாயத்தின் நன்மைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான கண்காட்சி இடம் பெற்றது.

மேலும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், தேங்காய் ஓடு மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளையும், சுற்றுபுறங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.

More News >>