பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசலின் விலை ஏறு மற்றும் இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தது. இதனால், வரலாறு காணாத பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
இதற்கிடையே, கடந்த 5ம் தேதி மட்டும் பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ2.63 காசு குறைந்து ரூ.84.70 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.78 காசு குறைந்து ரூ.77.11 காசுக்கு விற்பனையானது. ஆனால், அதன்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி மக்களை மேலும் பீதியடைய வைத்தது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி அன்று பெட்ரோல் விலை ரூ.85.88க்கு விற்பனையானது. தொடர்ந்து, நேற்று முன்தினம் 66 காசு குறைந்து, ரூ.85.22க்கும், டீசல் விலை ரூ.79.69க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து, ரூ.84.96 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகளும் குறைந்து ரூ.79.51 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருவதால், பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.