தலைமை நீதிபதி பாதுகாப்பில்குளறுபடி:ஐபிஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அஸ்ஸாம் மாநில கௌஹாத்தி நகரின் மேற்கு காவல் மாவட்ட துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது மனைவியுடன் கௌஹாத்தியிலுள்ள காமக்யா கோயிலுக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் நேர்ந்த குளறுபடி காரணமாக ரஞ்சன் கோகாய்க்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
தலைமை நீதிபதியின் வருகை குறித்து அனைத்து துறைகளுக்கும் முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்தமையால் அகில இந்திய பணிகள் சட்டத்தின் கீழ் கௌஹாத்தி மேற்கு காவல் ஆணையர் பன்வார் லால் மீனாவை பணியிடை நீக்கம் செய்து அஸ்ஸாம் மாநில ஆளுநர் பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த உத்தரவு வரும்வரை பணியிடை நீக்கம் தொடரும் என்றும் மேலதிகாரிகளின் அனுமதியின்றி அவர் அஸ்ஸாம் மாநில காவல் தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.