சத்தீஸ்கர் தேர்தல்: முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி அதிரடி முடிவு
அடுத்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல் அமைச்சரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 2016ம் ஆண்டு காங்கிரஸை விட்டு விலகிய பிறகு அஜித் ஜோகி, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியை ஆரம்பித்தார்.
அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ), பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அஜித் ஜோகி அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போதைய முதல்வர் ராமன் சிங்கை எதிர்த்து ஜோகி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அஜித் ஜோகியின் கட்சி 55 இடங்கள், பகுஜன் சமாஜ் 33 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் போட்டியிடுவதாக உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அஜித் ஜோகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. தற்போது அவர் போட்டியிடாமல் பரப்புரையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் அஜித் ஜோகியின் மருமகள் ரிச்சா ஜோகி, அகர்தாலா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.