தமிழகம் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் முதலிடம்!

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டெங்குவின் தீவிரத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக, தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்நிலையில் நாடுமுழுவதும், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 87 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 151 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 18 ஆயிரத்து 908 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 235 பேரும், தமிழகத்தில் 12 ஆயிரத்து 945 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகப்படியாக தமிழகத்தில் 40 பேரும், கேரளாவில் 35 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு நடத்திய பின்னர் புதிய புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் "டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளார்.

 

More News >>