குட்கா முறைகேடு வழக்கு - உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

குட்கா முறைகேடு தொடர்பாக காவல் ஆய்வாளர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என சிபிஐ தெரிவித்ததை அடுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், செங்குன்றம் காவல் நிலையத்தில் 2015ல் ஆய்வாளராக இருந்த சம்பத் வீட்டில் சோதனை நடத்தினர். இதையடுத்து, தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் சம்பத், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சம்பத் எதிராக இதுவரை சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு இல்லாத நிலையில் முன் ஜாமீன் மனு தேவையற்றது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர், ஜாமீன் கோரிய மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

More News >>