சொகுசு கப்பலில் செல்பி: மன்னிப்பு கோரினார் முதல்வரின் மனைவி அம்ருதா

சொகுசு கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று செல்பி புகைப்படம் எடுத்த மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா மன்னிப்பு கோரினார்.

மும்பையில் கடந்த 20ந் தேதி நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

மும்பையிலிருந்து கோவா வரை வாரம் நான்கு முறை சென்று வர போகிறது ஆங்கிரிய என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல். குறைந்த பட்சமாக 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 460 பயணிகள் உட்பட பணியாளர்களை சுமந்து செல்லும் இக்கப்பலில் ஒரு நீச்சல் குளம், மனமகிழ் கூடம், தங்கும் அறைகள் உள்ளன.

இந்த சொகுசு கப்பலின் முதல் பயணத்தை துவக்கி வைக்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னவிஸுடன் அவரது மனைவி அம்ருதாவும் வந்திருந்தார். கப்பலின் அழகிய பகுதிகளில் நின்று தனது கைபேசியில் பல கோணங்களில் செலஃபி புகைப்படம் எடுக்க துவங்கினார் அம்ருதா பாட்னவிஸ்.

ஒரு கட்டத்தில் கப்பலின் ஆபத்தான பகுதிக்கு சென்று அமர்ந்து செபி புகைப்படம் எடுத்தார். இதனை கண்ட பாதுகாவலர்கள் எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல் செலஃபி மோகத்தில் மூழ்கினார் அம்ருதா.

இதனை அறிந்த பலர் ஒரு மாநிலத்தின் முதல்வரின் மனைவி இப்படி அஜாக்கிரதையாக செலஃபி எடுக்கலாமா என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உயிரை பணயம் வைத்து இப்படி புகைப்படம் எடுக்க வேண்டுமா என பலர் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு அம்ருதா பாட்னவிஸ் மராத்தி மொழியில் ஒளிபரப்பாகும் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், நான் செலஃபி எடுத்த பகுதி ஆபத்தான பகுதி இல்லை என்றும் இது போல் யாரும் சவாலான காரியங்களில் ஈடுபட கூடாது என்றும் கேட்டு கொண்ட அம்ருதா, நான் தவறு செய்ததாக யாரவது நினைத்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

More News >>