வடசென்னையில் முதலிரவு காட்சி நீக்கப்படும் வெற்றிமாறன் அறிவிப்பு
மீனவர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்புகள் குவிவதால் வடசென்னை படத்தில் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வடசென்னை. கடந்த புதனன்று வெளியான இப்படம் 5 நாட்களில் சுமார் 50 கோடிக்கும் மேலாக வசூலை ஈட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் மீனவ சமுதாய மக்களை திருடர்களாகவும், திருட்டுத் தொழில், போதை மருந்து கடத்துதல், கொலை செய்தல் போன்றவற்றை செய்பவர்களாகவும் தவறாக இயக்குநர் வெற்றிமாறன் சித்தரித்து படம் எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வடசென்னை படத்தில் அதீத கெட்டவார்த்தைகள் மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்துள்ளதால் இப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வீடியோ ஒன்றை வெளியிட்ட வெற்றிமாறன், படத்தில் எந்த உள்நோக்கத்துடனும் அதுபோன்ற காட்சிகள் வைக்கவில்லை என்றும், அடிதட்டு மக்கள் எப்படி முன்னேறி வருகின்றனர் என்பதை காண்பிக்கவே முயற்சி செய்தேன் என்றும் கூறினார். மேலும், இப்படத்தின் மூலம் யார் மனமாவது புண்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறிய வெற்றிமாறன். படத்தில் அமீருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே படகில் நடக்கும் ஆபாச முதலிரவு காட்சியை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
10 நாட்களுக்குள் தணிக்கை துறையினரிடம் பேசி காட்சிகளை நீக்கப்போவதாக தெரிவித்தார்.