தீபாவளி முன்னிட்டு நெரிசலை சமாளிக்க பேருந்து நிலையங்கள் மாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காகவும், நெரிசலை சமாளிக்கும் வகையிலும் பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளி பண்டிகையின்போது எளிதாக மக்கள் பயணம் செய்யும் வகையில், சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். அதன்படி, ஆந்திரா செல்லும் பஸ்கள் அனைத்தும், மாதவரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும்.

இசிஆர் வழியாக செல்லும் பஸ்கள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்) கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக்கழக ஸ்டாண்டிலிருந்து புறப்படும். விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பஸ்கள் (திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும்) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும்.

திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படுகிறது. வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் (பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள்) பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படுகிறது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். மேலும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும் இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>