படேல் சிலைக்கு எதிர்ப்பு - 72 கிராம மக்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல்சிலை திறக்கப்படுவதற்கு, 72 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரத்திற்கு பதில் சொல்லாமல், படேல் சிலையைத் திறக்கவிட மாட்டோம் என்று மோடி அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 182 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அப்போதே நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலை அமைப்புப் பணிக்காக, தங்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு அரசு கையகப்படுத்தும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்று அச்சம் தெரிவித்தனர்.

ஆயினும், உரிய விலை வழங்கப்படும். நிலம் அளித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்று கூறி, நரேந்திர மோடி அரசு நிலத்தைப் பெற்றது.

இந்நிலையில், சிலை நிறுவும் பணிகள் முழுமையடைந்துள்ளது, அக்டோபர் 31ஆம் தேதி படேல் சிலையை மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட பின்பும், பழங்குடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை.

இது அவர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. சிலை அமையவிருக்கும் நர்மதா மாவட்டத்திலுள்ள 72 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை சிலையை திறக்கவிட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

“படேல் சிலை அமைப்பதால் 75 ஆயிரம் பழங்குடி மக்களின் வாழ்வாதாராம் பறிபோயிருக்கிறது. எனவே, சிலை திறப்பிற்கு எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக 75 கிராமங்களிலும் யாரும் சமைக்க மாட்டோம். சாப்பிடவும் மாட்டோம்” என்று, பழங்குடி மக்களின் தலைவர் முனைவர் பிரபுல் வாசவா தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் நாடுமுழுவதும் சிறிய மற்றும் பெரிய அளவில் ஏராளமான பழங்குடி அமைப்புகள் பங்கேற்கின்றன. வடக்கு குஜராத் பனஸ்கந்தா, தெற்கு குஜராத் டாங்ஸ் மாவட்டம் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்ற ஒன்பது மாவட்டங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

More News >>