பேடிஎம் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டிய மூன்று பேர் கைது
பிரபல பேடிஎம் நிறுவனத்தின் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டிய பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் அதிபரின் செயலாளராக பணியாற்றும் பெண், தன் கணவர் ரூபக் ஜெயின், சக ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து அதிபரின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துள்ளனர். மேலும், ரகசிய தகவல்களை வெளயிட்டால் நஷ்டமும், நற்பெயருக்கு கலங்கமும் ஏற்படும். அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் தங்களுக்கு ரூ.20 கோடி வழங்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து அதிபர் விஜய் சேகர் சர்மா நொய்டா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் உள்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில், நான்காவது குற்றவாளியாக கருதப்படும் ரோகித் சோமல் என்பவனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.