பட்டாசுக்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்தாண்டு தலைநகர் டெல்லியில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய மற்றும் தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பட்டாசு புகையால் காற்று மாசு அடைந்து சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், ஆதால் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய, மற்றும் தயாரிக்க தடை விதிக்க வேண்டும என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி போராட்டமும் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். விசாரணையின்போது தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி (செவ்வாய்கிழமை)கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் மறுத்துவிட்டனர்.
"ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதை ஏற்க முடியாது, அதிக அளவு சத்தம் எழுப்பும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது. பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும்" என்று கூறிய நீதிபதிகள், டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளனர்.